குழந்தைகள் மனிதனுக்கு கண்குளிர்ச்சியாவார்கள். அவர்களால் தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள் பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரக்கத் செய்கிறான்.
மேற்கூறிய அனத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நற்சிந்தனைகள் பிரகாசிக்கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழ்கின்றன. அவர்கள் நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம் உண்மையில் மனித வாழ்வின் அலங்காரமாகத் திகழ முடியும்.
அல்லாஹ் அவர்களைப் பற்றி தனது திருமறையில் வர்ணிக்கிறான்:
பொருளும் மக்களும் ஆவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே. (அல்குர்அன் 18:46)
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தனது பிரியத்திற்குரியவருக்கு பின்வருமாறு துஆ செய்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களும் அவர்களது தாயும், தாயின் சகோதரியும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு தொழ வைத்தபின் எல்லா நலவுகளையும் வேண்டி அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அனஸ் (ரழி) அவர்களின் தாயார் கூறினார்கள்: "இறைத்தூதரே! உங்களது குட்டி பணியாளருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.'' நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களுக்காக எல்லா நலவுகளையும் வேண்டி துஆச் செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் இறுதியில் "யா அல்லாஹ்! அவருடைய செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி அவருக்கு பரக்கத் செய்வாயாக!'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி)
பெற்றோர், குழந்தை வளர்ப்பிலும் அவர்களைச் சிறந்த முறையில் கண்காணித்து கவனம் செலுத்துவதிலும் அசட்டையாக இருந்தால் அக்குழந்தைகள் சோதனையாக, கவலையாக உருவெடுத்து விடுவார்கள். அதற்குப் பின் அந்தப் பெற்றோருக்கு தூக்கமற்ற இரவுகளும் துன்பமான பகல்களும்தான் பரிசாகக் கிடைக்கும்.
மகத்தான கடமைகளை அறிவார்
அருள்மறை குர்ஆனின் கம்பீரமான எச்சரிக்கைக் குரலை செவியேற்கும் முஸ்லிம், குழந்தை வளர்ப்பு எனும் மகத்தான பொறுப்பை அறிந்து கொள்வார்.
விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். (அல்குர்அன் 66:6)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு ஈட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளிகளே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.'' ஸஹீஹுல் புகாரி, ஸஹ்ீஹ் முஸ்லிம்)
இஸ்லாம், இந்த முழுமையான பொறுப்பை உலகில் வாழும் அனைவரின் கழுத்திலும் பிணைத்துள்ளது. அதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இஸ்லாம் கற்றுக் கொடுத்த முறையில் குழந்தைகளை வளர்ப்பதும், அதன் அழகிய நற்பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பாகும். நற்பண்புகளைப் பூரணமாக்கி, மக்களிடையே அதை உறுதிப்படுத்தவே ரஸுலுல்லாஹ்ி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் நற்பண்புகளை பரிபூரணப்படுத்தவே அனுப்பப்பட்டேன்.'' (முவத்தா மாலிக்)
பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை அல்லாஹ், அவனது ரஸுல் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் நபிமொழி மிகப்பெரிய ஒர் ஆதாரம் என அறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும்போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள்''..... (ஸன்னன் அபூதாவூத்)
ஒருவர் இந்த ஹதீஸை செவியேற்ற பின்னரும் தனது குழந்தைகளுக்கு ஏழு வயதாகியும் அவர்களைத் தொழுகைக்கு ஏவவில்லையானால், பத்து வயதாகியும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடிக்கவில்லையானால் அவரது இல்லம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய, குறைபாடுகளுடைய இல்லமாகும். இதற்காக பெற்றோர் இருவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்பார்கள்.
சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடியைப் போன்றதாகும். அதில்தான் பிள்ளைகள் வளரத் துவங்குகிறார்கள். அது குழந்தைகள் நற்பண்புகளுடன் மலர்வதற்கான முதல் கட்டமாகும். அவர்களது ஆசைகளும், ஆர்வங்களும், பண்புகளும் உருப்பெறும் மையமாகும். எனவே இக்காலகட்டத்தில் அப்பிஞ்சு இதயங்களைப் பண்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மகத்தானது. அவர்களது உடல் அரோக்கியத்தைப் பேணுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல், அறிவு, ஆன்மா என அனைத்தும் பூரணத்துவம் பெற்றுத் திகழ பெற்றோர்கள் பாடுபட வேண்டும்.
விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்
குழந்தையின் தாயும் தந்தையும் அதன் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் தூய்மையான, மென்மையான உள்ளத்தினுள் ஊடுருவிச் சென்று அக்குழந்தையின்பால் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையில் மிக நுட்பமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
முஸ்லிம் தனது குழந்தைகளிடம் பல வழிகளிலும் அன்பைத் தேடவேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழகவேண்டும். அவர்களது வயது, அறிவிற்கேற்ப அவர்களுடன் விளையாடி, சிரிப்பூட்டி அவர்களை இன்புறச் செய்து அக்குழந்தைகளின் இதயங்களுக்கு மகிழ்வான அன்பான வார்த்தைகளைக் கூறவேண்டும். நேசம் மற்றும், மரியாதையின் காரணமாக கட்டுப்படுவதற்கும், மிரட்டல், நெருக்கடி, நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டுப்படுவதற்குமிடையே மிகுந்த வேறுபாடுண்டு. முந்தியது நிரந்தரமான அடிபணிதல். இரண்டாவது கண்டிப்பும் மிரட்டலும் இல்லாதபோது நீங்கிவிடும் தன்மை உடைய தற்காலிக அடிபணிதலாகும்.
சிலர், பெற்றோர் பிள்ளைகளுடன் எளிமையான முறையில் கலந்துறவாடினால் அது தங்களின் ஸ்தானத்துக்கே பெரும் இழுக்காகிவிடும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறானதாகும். பிள்ளைகளுடன் நற்பண்பு மிக்க அழகிய நடத்தையை மேற்கொள்வது, அறிவார்ந்த பெற்றோரின் வெற்றிகரமான வழிமுறை எனத் தற்கால குழந்தை வளர்ப்புத் திட்டங்களும் எற்றுக் கொள்கின்றன. இதை நபி (ஸல்) அவர்கள் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது சொல்லாலும் செயலாலும் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரழி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸய்யிர் (ரழி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து "எவர் என்னிடம் முந்தி வருகிறாரோ அவருக்கு இன்னின்ன கிடைக்கும்'' என்று கூறுவார்கள். சிறுவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒடி வந்து அவர்களது முதுகிலும் நெஞ்சிலும் விழுவார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களை முத்தமிடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது "அல் அதபுல் முஃப்ரத்' என்ற நூலிலும் இமாம் தப்ரானி (ரஹ்) தனது "முஃஜம்' என்ற நூலிலும் அபூஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களது பாதங்களை தனது பாதத்தின் மீது வைத்து பிறகு "நீ மேலே ஏறு'' என்று கூறினார்கள்.
மகத்தான போதனையாளரான நபி (ஸல்) அவர்கள் ஹஸன் ஹுஸைன் (ரழி) அவர்களைச் சுமப்பதிலும் பாசத்தைப் பொழிவதிலும் நேசிப்பதிலும் காட்டிய நடைமுறைகள், பெற்றோர்களுக்கும் பாட்டனார்களுக்கும் எல்லாக் காலத்திற்குமான அழகிய முன்மாதிரியாக அமைந்துள்ளது. அந்த மென்மையான இளம் நாற்றுகளுடன் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடனும் மதிப்புடனும் இருந்தாலும் அது சிறுவர் சிறுமியரிடம் நேசத்தை வெளிப்படுத்துவதற்கு தடையாகி விடக்கூடாது என்ற விஷயம் பின்வரும் ஹதீஸிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது:
ஷத்தாத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸனைச் சுமந்தவாறு வந்தார்கள். முன்னால் வந்து நின்று கீழே உறக்கிவிட்டு பின்பு தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். தொழுகையில் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். சந்தேகத்தில் நான் தலையை உயர்த்திப் பார்த்தபோது சிறுவர் நபி (ஸல்) அவர்களின் முதுகில் இருந்தார். உடன் நான் ஸஜ்தாவுக்குத் திரும்பி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் வினவினர். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட ஸஜ்தா செய்தீர்களே (காரணமென்ன?)'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது மகன் என் மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அவர் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குள் நான் அவசரப்பட விரும்பவில்லை.''(ஸன்னனுன் நஸயீ)
முஸ்லிம் தங்களது பிள்ளைகளுடன் இம்மாதிரி நடந்து கொள்வது அவசியமாகும். அவர்களுடன் கலந்துறவாடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் அப்பிஞ்சு இதயங்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டவேண்டும்.
அன்பை உணரச் செய்வார்
பெற்றோரின் தலையாயக் கடமைகளில், அவர்கள் பிள்ளைகளிடம் தங்களது அன்பையும் நேசத்தையும் உணரச் செய்வதும் ஒன்றாகும். அப்போதுதான் பிள்ளைகள் மன ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அவர்களது உள்ளங்களில் உறுதியும் தெளிவும் நிறைந்திருக்கும். கருணை இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும். அது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிகச் சிறந்த பண்பாக இருந்தது. அவர்களது நடைமுறைகள் அனைத்திலும் கருணை வெளிப்பட்டது.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்களை விட குடும்பத்தாரிடம் கருணை கொண்ட எவரையும் நான் கண்டதில்லை.'' மேலும் கூறினார்கள்: "மதீனாவின் மேடான பகுதியிலிருந்த ஒரு வீட்டில் நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீம் (ரழி) அவர்களுக்கு பாலூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று வருவார்கள், நாங்களும் டனிருப்போம். வீட்டினுள் நுழைந்து அவரைத் தூக்கி முத்தமிடுவார்கள். பின்பு திரும்பி வருவார்கள்.'' (ஸஹீீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தைகள் மீது மட்டும் அன்புடன் இருக்கவில்லை. மாறாக, விளையாடிக் கொண்டிருக்கும் இளம் சிறார்களைக் காணும்போது அவர்களிடமும் பாசத்தையும் வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கண்டால் அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.'' ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களது பொன்மொழிகளில் ஒன்று: "நம்முடைய சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரும் பெரியவர்களின் கடமைகளை அறியாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.'' (முஸ்னத் அஹ்மத்)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அக்ரஃ இப்னு ஹ்ாபிஸ் (ரழி) அவர்கள் "எனக்கு 10 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எருவரையும் நான் முத்தமிட்டதில்லை'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ""கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் எப்போதும் மனிதர்களின் இதயங்களில் அன்பையும் கருணையையும் வளர்த்து வந்தார்கள். அதுவே மனிதத் தன்மைகளில் மிக விசேஷமான தன்மை என்பதை வலியுறுத்தினார்கள்.
ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை'' ஊஎறு கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா (ரழி) வந்தால் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று வரவேற்று முத்தமிடுவார்கள். அவரைத் தங்களது இருக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரழி) அவர்களிடம் சென்றால் அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களை மகிழ்வுடன் வரவேற்று கரத்தைப் பிடித்து முத்தமிடுவார்கள். இன்னும் தங்கள் இக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஃபாத்திமா (ரழி) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை வரவேற்று முத்தமிட்டார்கள். ஸஹீஹுல் புகாரி)
உண்மை முஸ்லிம் இந்த உயரிய வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட முடியாது. தங்களது இதயங்கள் பசுமையற்று வறண்டதாக, கடின சித்தம் உடையதாக இருந்தாலும் சிறுவர்களுடன் பழகும்போது வன்மையாக நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில், இம்மார்க்கம் பிரகாசமான நேர்வழியைக் காட்டித் தருகிறது; இதயத்தை மென்மைப்படுத்துகிறது; அன்பின் ஊற்றுகளைப் பீறிடச் செய்கிறது.
தாராளமாகச் செலவிடுவார்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது இயற்கையாகக் காட்டும் அன்பும் பரிவும் மட்டும் போதுமானதல்ல. சில நேரத்தில் வாழ்வில் சிரமமும் நெருக்கடியும் வறுமையும் ஏற்படும்போது பிள்ளைகளை மறந்து விடலாம். அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை எண்ணி மனம் சோர்வடையலாம். இக்காரணத்தை முன்னிட்டுத்தான் பெற்றோர்கள் செய்யும் தியாகத்திற்கு மகத்தான நன்மை உண்டு என்று இஸ்லாம் உற்சாகமூட்டுகிறது. அல்லாஹ் வழங்கும் நன்மையை எண்ணும்போது பிள்ளைகளுக்காக சிரமத்தை சகித்துக் கொள்வதும், தியாகம் செய்வதும், அதனால் ஏற்படும் சோதனையும் பெற்றோர்களுக்கு சுலபமாகிவிடுகின்றன.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவிடுவதற்கு எனக்கு நற்கூலி உண்டா? நான் அவர்களை இவ்வாறு (வீணாக) விட்டுவிட முடியாது. ஏனென்றால் அவர்கள் எனக்கும் குழந்தைகள்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! நீ அவர்களுக்குச் செலவிடுவதில் உனக்கு நற்கூலி உண்டு'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அபூ மஸ்வூத் அல்பத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் தனது குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவிடுவாரானால் அது அவருக்கு தர்மமாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹ்ீஹ் முஸ்லிம்)
மேலும் ஒருவர் தனது குடும்பத்தினருக்காகச் செலவிடுவதை செலவுகளிலெல்லாம் மிகச் சிறந்த செலவாக இஸ்லாம் கூறுகிறது. இதற்கான முன்னுதாரணத்தை நபிமொழியில் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீ அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட தீனார், அடிமையை உரிமை விடுவதற்காகச் செலவிட்ட தீனார், எழை ஒருவனுக்காகச் செலவிட்ட தீனார், உனது குடும்பத்துக்காகச் செலவிட்ட தீனார், இவை அனைத்திலும் மிக மகத்தான நன்மை பெற்றது உனது குடும்பத்தினருக்காகச் செலவிட்ட தீனார் அகும்.'' ஸஹீஹுல் புகாரி)
ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும்.''
முஸ்லிம் தனது குடும்பத்தினருக்குச் செலவிடுவதில் அளவற்ற ஆனந்தம் அடைவார். தனது குடும்பத்தினருக்காகவோ அல்லது பிறருக்காகவோ அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி செலவிடும்போது அதற்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை வழங்குவான். எந்தளவுக்கென்றால் ஒரு மனிதர் பாசத்துடன் தனது மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டுவாரானால் அதிலும் அவருக்கு நற்கூலி உண்டு.
ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீர் ஒன்றை செலவிட்டால் நிச்சயமாக அதற்கு நற்கூலியைப் பெறுவீர். உமது மனைவியின் வாயில் ஊட்டிவிடும் ஒரு கவள உணவிற்காகவும் நன்மை அளிக்கப்படுவீர்.'' ஸஹீஹுல் புகாரி, ஸஹ்ீஹ் முஸ்லிம்)
முஸ்லிம் தனது குடும்பத்தினரை விட்டு விலகி அவர்களை துன்பத்திலும் பசியிலும் வாடும் நிலையில் விட்டு விடக்கூடாது. குடும்பத்தினரின் நியாயமான தேவைகளைப் புறக்கணிக்கும் ஆண்களை கடுமையான தண்டனையைக் கொண்டு எச்சரித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் உணவளிக்க வேண்டியவர்களை வீணடிப்பது ஒரு மனிதனுக்கு பாவத்தால் போதுமானதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
கருத்து:- தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் என்று தனது ஆதரவில் வாழ்ந்து வருபவர்களை அலட்சியப்படுத்தி, அவர்களை சிரமத்தில் விட்டுவிடுவது ஒரு பெரும் குற்றமாகும். "பாவத்தால் போதுமானது'' என்பதற்கு பொருள், அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக இந்தப் பாவமே போதுமானது என்பதா
ஆண், பெண்ணிடையே வேறுபாடு காட்டமாட்டார்
பெண் குழந்தைகள் பிறந்தால் சிலர் சஞ்சலமடைந்து, பிள்ளைகளெல்லாம் ஆண் குழந்தைகளாக பிறந்திருக்க வேண்டுமே என்று அதங்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளைப் பெற்று அவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டி, முறையாக வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு அல்லாஹ் தரும் வெகுமதியை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அப்படி அறிந்திருந்தால், அந்த நன்மையை அடைய பெண் குழந்தைகள் வேண்டுமென ஆசை கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்கள் மீது பொறுமை காத்து, நல்ல முறையில் தனது உழைப்பிலிருந்து அவர்களுக்கு உணவு பானம், உடையளித்து வருகிறாரோ அவருக்கு அப்பெண் மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக ஆவார்கள்.'' (முஸ்னத் அஹ்மத்)
மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், "எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்கு நிச்சயமாக சுவனம் உறுதியாகிவிட்டது'' என்று கூறியபோது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் கேட்டார்: "இரு பெண் மக்கள் இருந்தாலுமா இறைத்தூதரே?'' நபி (ஸல்) அவர்கள், "ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்'' என்றார்கள்.
அல்லாஹ்விடமுள்ள மகத்தான நற்கூலியை தெரிந்த பின்னும் தனது பெண் மக்களை பராமரிப்பதில் யார்தான் அசட்டை செய்ய முடியும்? இஸ்லாம் மிக நுட்பமான மார்க்கம். மனித வாழ்வின் எல்லாக் காலங்களிலும் சூழ்நிலைகளிலும் அவனுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான, அறிவுப்பூர்வமான தீர்வை அளிக்கிறது. சில சமயங்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் பிள்ளை "தலாக்' கூறப்பட்டு தாய் வீடு திரும்புவாள். அப்போது வீட்டில் குழந்தைகள் அதிகமாக இருப்பதாலோ அல்லது வருமானக் குறைவினாலோ தந்தை மிகுந்த சிரமத்திலும் நெருக்கடியிலும் இருப்பார். அந்நேரத்தில் இஸ்லாம் தந்தையின் புண்பட்ட உள்ளத்திற்கு அறுதல் அளித்து, பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் களைகிறது. தலாக் விடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பெண்ணுக்கு செலவு செய்வதும் அவளைப் பராமரிப்பதும் மிக உயர்ந்த தர்மத்தைச் சேர்ந்தது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள், சுராகா அப்னு ஜுஃஷும் (ரழி) அவர்களிடம் "நான் உமக்கு மகத்தான தர்மத்தை அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம் இறைத்தூதரே!'' என்றபோது நபி (ஸல்) கூறினார்கள்: "(கணவன் வீட்டிலிருந்து) திருப்பி அனுப்பப்பட்ட உமது மகள். உம்மைத் தவிர அவளுக்கு சம்பாதித்து தரக்கூடியவர் ஒருவருமில்லை'' (அந்நிலையில் அப்பெண்ணை பராமரித்துக் காப்பது தர்மங்களில் மகத்தான தர்மமாகும்.) (அல் அதபுல் முஃப்ரத்)
நேசம் மிகுந்த இஸ்லாமிய உலகில் குழந்தைகள் அடையும் இத்தகைய பராமரிப்பு எங்கே! பொருளியலை மையமாகக் கொண்ட மேற்கத்திய உலகில் குழந்தைகள் அனுபவிக்கும் துன்பங்கள் எங்கே! இரண்டும் நிச்சயமாக சமமாக முடியாது. அங்கு ஆணோ பெண்ணோ பதினெட்டு வயதை அடைந்துவிட்டால் பெற்றோரின் கண்காணிப்பி லிருந்து விலகிச் சென்று விடுகிறார்கள். கடுமையான பொருளாதார வாழ்க்கையைச் சந்தித்து, பொருளீட்டுவதில் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பெற்றோரின் அரவணைப்புக்கு திரும்புவதோ, அவர்களின் அன்பை அடைவதோ மிகச் சிரமமான ஒன்றாகி விடுகிறது.
மனிதனின் வெற்றிக்காகவும் நற்பாக்கியத்திற்காகவும் அல்லாஹ் வினால் அருளப்பட்ட மார்க்கத்துக்கும், குறையுள்ள மனிதனின் கேடு விளைவிக்கும் வாழ்க்கை நெறிக்குமிடையேதான் எத்துனை தூரம்!
மேற்கத்திய நாடுகளில் பொருளியல் சார்ந்த வாழ்க்கை நெறியின் விளைவாக கட்டுப்பாடற்ற, ஒழுங்கீனம் நிறைந்த வாலிபர்களும், திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்வை அழித்துக் கொள்ளும் இளம் பெண்களும் நிறைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவ்வாறான ஆண் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
சிந்தனை, செயலில் எற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பார்
மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தனது மக்களைக் கண்காணித்து, எதைப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கென எப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும், அவர்கள் தங்களை அறியாமலேயே எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தமது மக்களுடன் எல்லா நேரங்களிலும் அல்லது பெரும்பாலான நேரங்களில் இணைந்திருக்கும் அவர்களது நண்பர்களைப் பற்றியும், ஒய்வு நேரங்களில் எப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்கள் அறியாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
அந்நிலையில் அவர்களது படிப்பில், விருப்பங்களில் எதேனும் மாற்றங்கள் தெரிந்தால் அல்லது தீய நண்பர்களுடனான தொடர்பு அல்லது சந்தேகத்திற்கிடமான இடங்களுக்குச் செல்வது அல்லது புகைபிடித்தல், சூதாடுவது போன்ற தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது நேரத்தை வீணாக்கி, உடலை பலவீனப்படுத்தும் வீண் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால் அம்மக்களை மென்மையான, அறிவுப்பூர்வமான அணுகுமுறையின் மூலம் தடுத்து நேர்வழியின் பக்கம் அவர்களைத் திருப்ப வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இயற்கையிலேயே பிறக்கின்றது. அதன் பெற்றோர்களே அக்குழந்தையை யூதர்களாக அல்லது கிருஸ்துவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள்.'' ஸஹீஹுல் புகாரி)
பிள்ளைகளின் அறிவை வளர்த்து, நற்பயிற்சிகளால் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். படிப்பதற்கென தமது மக்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள், அவர்களது அறிவுக் கண்களைத் திறப்பதாகவும் உயரிய பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். அந்நூல்கள் அறிவை அழித்து, நல்லியல்புகளைச் சிதைத்து, மனதில் நன்மையின் மீதான ஆர்வத்தை அனைக்கக் கூடியதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அவர்களது பழக்க வழக்கங்கள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்; தீமையை அல்ல. சத்தியத்தின் பிரகாசத்தைத் தூண்ட வேண்டும்; அசத்தியத்தின் நெருப்புக் கங்குகளை அல்ல. நற்குணங்களை வளர்க்க வேண்டும்; கெட்ட குணங்களை அல்ல. நண்பன் சுவனத்தின்பால் அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும்; நரகத்தின்பால் அல்ல. சத்தியத்தின்பால் வழிகாட்ட வேண்டும்; அசத்தியத்தின்பால் அல்ல. நேர்மை, வெற்றி, நன்மை, உயர்வுக்கு வழிகாட்ட வேண்டும்; வழிகேடு, அழிவு, நஷ்டம், பிறருக்கு நோவினை யளித்தல் போன்ற தீய செயல்களுக்கு அல்ல.
எத்தனையோ நண்பர்களின் நட்பு அவர்களை தீமையில் வழுக்கி விழச் செய்கிறது, தீமைப் படுகுழியினுள் வீழ்த்திவிடுகிறது. அழிவான சிந்தனைகளை இதயத்தினுள் திணித்து விடுகிறது. ஆனால் இதைக் கவனிக்க வேண்டிய அவர்களது பெற்றோர்களோ அலட்சியத்தில் அழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு முஸ்லிம் தனது பிள்ளைகளை வளர்த்து பரிபாலிப்பதில் அவர்களுக்குரிய நூல்கள், நாளிதழ்கள், நண்பர்கள், பொழுதுபோக்குகள், கல்விக்கூடம், ஆசிரியர்கள், சபைகள், செய்தி உடகங்கள் ஆகியவைகளைக் கண்காணிக்க வேண்டும். அவைகளைத் தேர்வு செய்வதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். மேலும் அவர்களது பண்புகளில் அல்லது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
அவசியம் எற்படும்போது அப்பிள்ளைகள் விரும்பினாலும் வெறுத்தாலும் அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் எற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின் ரகசியத்தையும் மேற்கூறிய விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்த பெற்றோர்களின் பிள்ளைகள் அவர்களுக்கும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நற்பயன் அளிப்பவர்களாகத் திகழ்கிறார்கள். அவ்வாறு பொறுப்பை உணராமல் அக்கடமையை பாழாக்கியவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கேடாக அமைந்து, இவ்வுலக, மறு உலக வாழ்வின் சோதனையாக மாறிவிடுகிறார்கள்.
"விசுவாசிகளே! உங்கள் மனைவிகளிலும் உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு விரோதிகளும் இருக்கின்றனர்''. ஆகவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்... (அல்குர்அன் 65:14)
பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து, பிள்ளை வளர்ப்பில் தங்களது கடமைகளை அறிந்து, முறையாக அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றினால் பிள்ளைகள் ஒருபோதும் அவர்களுக்கு விரோதியாக மாட்டார்கள்.
சமத்துவம் பேணுவார்
முஸ்லிம் தந்தையின் அறிவார்ந்த நடைமுறைகளில் ஒன்று அவர் தனது மக்களிடையே சமத்துவம் பேணுவதாகும். எல்லா விஷயங்களிலும் அவர்களில் ஒருவரை விட மற்றவருக்கு தனிச்சிறப்பு வழங்கக்கூடாது. ஏனெனில், தமக்கும் பிற சகோதரர்களுக்குமிடையே காட்டப்படும் சமத்துவத்தையும், நீதத்தையும் உணரும் பிள்ளை சீரான சிந்தனையைக் கொண்டிருப்பார். குறைபாடுகளிலிருந்து நீங்கி, ஏனைய சகோதரர்கள் மீது பொறாமை கொள்ளாமல் இருப்பார். சமத்துவமாக வளர்க்கப்படும் பிள்ளைகளிடத்தில் பிறரை நேசித்தல், தன்னைவிட பிறரைத் தேர்ந்தெடுத்தல், பிறருக்கு உபகாரம் செய்தல் போன்ற நற்குணங்கள் குடிகொள்ளும். அதனால்தான் பிள்ளைகளிடையே சமத்துவத்தைப் பேணுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நுஃமான் அப்னு பஷீர் (ரழி) அவர்களின் தந்தை நுஃமான் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து கூறினார்கள்: "எனது அந்த மகனுக்கு ஒர் அடிமையை அன்பளிப்பாக தந்துள்ளேன்.'' நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "உங்களது அனத்து பிள்ளைகளுக்கும் அது போன்ற அன்பளிப்புச் செய்தீரா? அவர் "இல்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அந்த அடிமையைத் திரும்ப வாங்கிக்கொள்' என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் "இதை உமது அனத்து பிள்ளைகளுக்கும் செய்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களது பிள்ளைகளிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நுஃமான் (ரழி) கூறினார்கள்: உடனே எனது தந்தை இல்லத்திற்கு வந்து அந்த அன்பளிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள்: "பிஷ்ரே! உமக்கு இவரைத் தவிர வேறு குழந்தைகள் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "உமது எல்லா மக்களுக்கும் அவ்வாறு அன்பளிப்புச் செய்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "என்னை சாட்சியாக்காதீர்கள். நான் ஒரு குற்றச்செயலுக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'' என்றார்கள். பின்பு கேட்டார்கள்: "உம்மக்கள் அனைவரும் உமக்கு உபகாரம் செய்வதில் சமமாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறீரா?'' அவர் "ஆம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் அதைச் செய்யாதீர்'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உண்மை முஸ்லிம் தமது பிள்ளைகளுக்கு செலவிடுதல், அன்பளிப்பு செய்தல் போன்ற எல்லா விஷயங்களிலும் ஒருவரைவிட மற்றவருக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது. அப்போதுதான் பிள்ளைகள் அனவரும் பெற்றோருக்காக துஆ செய்து உண்மையான அன்பையும், கண்ணியத்தையும் வெளிப்படுத்துவார்கள்.
உயர்பண்புகளை வளர்ப்பார்
உபகாரம், மகிழ்ச்சி, போதுமென்ற தன்மை ஆகிய குணங்களால் அலங்காரம் பெற்ற உள்ளங்களைக் கொண்டுதான் பிள்ளைகளை மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு பெற்றோர்களால் கொண்டுபோக முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நற்பாக்கியம் அல்லாஹ் விடமிருந்து கிடைக்கிறது. ஒழுக்கம் பெற்றோரிடமிருந்து கிடைக்கிறது.'' (அல் அதபுல் முஃப்ரத்)
மார்க்க அறிவுள்ள முஸ்லிம் தமது பிள்ளையின் உள்ளத்தினுள் நுட்பமான வழிகளைக் கொண்டு ஊடுருவி உயர் பண்புகளையும் நல்லறிவையும் எப்படி விதைப்பது என்று அறிந்திருப்பார்.
குழந்தை வளர்ப்பின் நுட்பமான வழிமுறைகள்:
1. பெற்றோர் தன்னை அழகிய முன்மாதிரியாக ஆக்க வேண்டும்.
2. பிள்ளைகளுடன் மனம் விட்டு கலந்து பழகவேண்டும்.
3. அவர்களை முகமலர்ச்சியுடன் அரவணைத்து அன்பு காட்ட வேண்டும்.
4. அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்ட வேண்டும்.
5.அனைத்து பிள்ளைகளுடனும் அன்புடன் நடந்து நீதத்தையும் சமத்துவத்தையும் பேணவேண்டும்.
6.முற்றிலும் பலவீனமடைந்துவிடாமல் நளினமாகவும், கொடூரத்தனமின்றி சற்று கடினமாகவும் அவர்களுக்கு உபதேசித்து நேர்வழிகாட்டி செம்மைப்படுத்த வேண்டும்.
நேர்மையான, திறந்த சிந்தனையுள்ள, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு தகுதியான, தயாளத்தன்மை பெற்ற நல்ல பிள்ளைகளை அதுபோன்ற சூழ்நிலைதான் உருவாக்க முடியும்.
இஸ்லாமிய அடிப்படையையும் குர்ஆனின் கட்டளைகளையும் பின்பற்றும் நல்ல குடும்பங்களில் அவ்விஷயத்தை தெளிவாகக் காணலாம்.
அல்லாஹ்வின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோம் என்றும் கூறுவீராக! (அல்குர்அன் 2:138)
0 comments: on "முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்"
Post a Comment